THERAZHUNDUR-தேரழுந்தூர் தேவாதி ராஜா பெருமாள் கோயில்

தேரழுந்தூர் மூலவரின் திருநாமம் தேவாதி ராஜன், பெருமாளின் பெயர் தேவாதி ராஜன் என்று இருப்பதால் அங்குள்ள அனைத்து மக்களும் எம்பெருமானின் திருநாமமான தேவாதி ராஜன், தேவாதி ராஜன் என்று அடிக்கடி உச்சரித்துக்கொண்டே இருந்தார்கள்.

ஒருமுறை திருமங்கை மன்னன் எம்பெருமானை மங்களாசாசனம் செய்வதற்காக தேரழுந்தூர் வந்தபொழுது அங்குள்ள அனைத்து மக்களும் தேவாதி ராஜன் என்று பேசுவதைக் கேட்டார். மக்களின் இந்த பேச்சைக் கேட்ட திருமங்கை மன்னன் மக்கள் யாருக்கும் பெருமாளின் மீது பக்தி இல்லை, அனைவரும் ராஜாவின் பெயரினைதான் உச்சரிக்கிறார்கள் என்று தவறாக நினைத்து விட்டார். ஆகையால் நாம் இங்கிருப்பது நல்லதல்ல. என்று தேரழுந்தூர் ஊரினை விட்டு கிளம்ப தயாராகி விட்டார் திருமங்கை மன்னன்.

ஆனால் எம்பெருமானோ திருமங்கை மன்னன் இவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது இங்கு வந்து மங்களாசாசனம் செய்த பிறகுதான் இந்த ஊரினை விட்டு செல்ல வேண்டும் என்று எம்பெருமான் விரும்பினார். திருமங்கை ஆழ்வார் கிளம்ப தயாரான சமயத்தில் அவர் நகர முடியாதவாறு காலில் விலங்கு போட்டுவிட்டார். எப்படி காலில் விலங்கு வந்தது என்று நினைத்த திருமங்கை மன்னன் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் பிறக்கும் போது வசுதேவர் மற்றும் தேவகியின் விலங்குகள் எப்படி தானாகவே கழன்று விட்டதோ அதை போன்றே என்னுடைய காலிலும் தானாகவே விலங்கு வந்ததை நினைத்த திருமங்கை மன்னன் இது நிச்சயம் எம்பெருமானின் லீலையாகத்தன் இருக்க வேண்டும் என்று உறுதியாக நினைத்தார்.

கோவிலுக்கு சென்று எம்பெருமானை மங்களாசாசனம் செய்கையில் காலில் விலங்கு விழுந்ததை நினைவு கூறும் வகையில் முதல் பாசுரத்திலே விலங்கு என்று ஆரம்பித்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்தார்.