கோபுர தரிசனம் -1

0

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு மகாலட்சுமிபுரீசுவரர் திருக்கோயில், திருநின்றியூர், மயிலாடுதுறை மாவட்டம் 609118.

*மூலவர்:
லட்சுமிபுரீசுவரர், மகாலட்சுமீசர்
*தாயார்:
உலக நாயகியம்மை, லோகநாயகி
*தல விருட்சம்:
விளாமரம்
*தீர்த்தம்:
இலட்சுமி தீர்த்தம்.

*இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.

*அகத்தியர், பரசுராமர் மற்றும் திருமகள் வழிபட்ட திருத்தலம்.

*சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கம் உடையவன். அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான். இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து, இத்தல எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற, மன்னன் காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையனிடம் இத்தலத்தில் ஏதேனும் விசேஷம் உண்டா? எனக் கேட்டான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான். மன்னன் அவ்விடத்தில் நிலத்தைத் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் மேலும் அவ்விடத்தை ஆராய ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு மிவும் வருத்தம் அடைய, அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது.

*இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம்.

*இந்த சம்பவம் “அனுஷம்” நட்சத்திர நாளில் நடந்தது. எனவே “அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது” என்று கருதப்படுகிறது.

*மஹாலட்சுமி தேவி சிவனை வழிபட்டதலம் என்பதால் இத்தலம் திருநின்றியூர் என்று அழைக்கப்படுகிறது.

*பரசுராமர் தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பரசுராமன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னி முனிவரும், தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார்.

*நவக்கிரகங்களின் அமைப்பு- இக்கோயிலில் சூரியனும் சந்திரனும் எதிரெதிரே உள்ளனர்.
மற்ற எல்லாக் கோயில்களில் இருந்தும் இது மிகவும் வித்தியாசமானது.

எனவே மக்கள் தங்கள் முன்னோர்களின் இரட்சிப்புக்காக அமாவாசை நாளில் பிரார்த்தனை மற்றும் சிறப்பு பூஜைகளை செய்கிறார்கள்.

*இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து பாவங்களும், பயமும் நீங்கும். எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.

*இக்கோயில் தருமையாதீனத்தின் கோயில்.

*வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து கோவில் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன.

🙏சிவாயநம.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *