சென்னை பெருநகர காவல் துறை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து புதுப்பேட்டை மற்றும் நரியங்காடு காவலர் குடியிருப்புகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தி, காவலர் குடும்பத்தினர்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் கபசுர குடிநீர் பவுடர் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆளிநர்களை காக்கும் பொருட்டு ஓமந்தூரார் தோட்டம், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் மற்றும் சென்னை பெருநகர காவல் இணைந்து, சென்னை பெருநகர ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் (07.05.2020) அன்று புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், பணியின்போது கவனத்துடன் செயல்பட்டு கொரோனா தோற்று ஏற்படாமல் தடுத்து, தங்களையும், தங்களது குடும்பத்தை காக்கவும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டு நெல்லிக்காய், துளசி, இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள்தூள் சேர்த்து தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானத்தை காவல் ஆணையாளர் அவர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வழங்கினார். மேலும், காவலர் குடும்பத்தினர்க்கு கபசுர குடிநீர் பவுடர் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் நரியங்காடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கலந்து கொண்டு காவலர் குடும்பத்தினர்க்கு அறிவுரைகள் வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம், கபசுர குடிநீர் பவுடர் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு பன்னோக்கு மருத்துவமனையின் மருத்துவ குழுவினர், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திருமதி.எஸ்.விமலா (தலைமையிடம்), திரு.கே.சௌந்தரராஜன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நன்றி : சென்னை மாநகர காவல் முகநூல்