WHAT DO YOU WANT TO KNOW ABOUT JALLIKATTU-ஜல்லிக்கட்டு

0

ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்வியலின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந்தைய பெயர்கள்.

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள்(யாதவர்) தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர். ஆனால், நாளடைவில் நால்வகை நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அந்த எருது விளையாட்டு பழகிப்போனதுதான் வேடிக்கை.

அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சி நிலத்தவரும் நெய்தல் நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பொதுப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *