நிகழ்காலத்தை வேறு எதற்காகவும் தியாகம் செய்யாதே
“நிகழ்காலத்தை வேறு
எதற்காகவும் தியாகம் செய்யாதே என்பதே எனது முழுமையான செய்தியாகும்”
- ஓஷோ.
உலக மக்கள் அனைவரும், வெற்றி என்பதற்கு தவறான புரிதல்களை கொண்டுள்ளார்கள்.
அதே புரிதல்களுடன், வெற்றிக்கனியை சுவைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில், காலம் நேரம் பார்க்காமலும், சரியாக சாப்பிடாமலும்,
தமது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்காமல் பறந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு நாள், அந்த வெற்றி இலக்கை அடைந்து, வெற்றிக்கனியை சுவைத்தும் மகிழ்கிறார்கள் மேலும் பேரானந்தம் அடைகிறார்கள்.
மகிழ்ச்சி.
ஆனால், வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தின் இடையில், அவர்கள் மகிழ்வாக இருந்தார்களா என்று கேட்டால், கிடைக்கும் பதில் என்னவோ இல்லை என்பது தான்.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் வெற்றியை அடைந்தால் மட்டுமே மகிழ்ச்சி என்பதாகும்.
வெற்றி பெற்றவர்களின் கூற்றுப்படி எடுத்துக்கொண்டால், வெற்றி இலக்கை அடைந்த அன்று மட்டுமே மனது மகிழ்வாக இருந்திருக்கும். இடைப்பட்ட காலங்களில் (வருடங்களில்), வெற்றியாளர்களின் மனது முழுவதும், மன அழுத்தம் நிறைந்ததாகவே இருந்திருக்கும். இதன் காரணமாகவே வெற்றிபெற்ற பலபேர் சிறிது காலத்திலேயே உடல் நலம் கெட்டு மருத்துவமனைகளில் இருக்கும்படி ஆகிவிடுகிறது.
இதை முற்றிலும் தவிர்க்க, வெற்றிக்கான முயற்சியில், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், வெற்றியாக நினைத்து மனதை மகிழ்வாக வைத்திருந்தால், வெற்றி இலக்கை அடைந்த தருணத்தில் பேரானந்தம் பெறலாம். மேலும் வாழ்க்கையை தொலைத்து விட்டோமே என்ற வருத்தம் சிறிது கூட மனதில் தோன்றாது.